பெண் பாலியல் முறைப்பாட்டில் கைதான நாமல்....

 

 
பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு மேற்கொண்ட குற்றச்சாட்டின் பேரில், ஊழல் எதிர்ப்பு முன்னணியின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமாரவை வரக்காபொல காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமல் குமார ஒரு கதிரையில் கட்டப்பட்டிருப்பதைக் காட்டும் பல படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்த நிலையில், பெண் ஒருவர் வரக்காபொல காவல்நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நாமல் குமார கைது செய்யப்பட்டு வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
 
   நாமல்குமார தனது வீட்டிற்குள் வைத்து தன்னை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக குறித்த பெண் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். பின்னர், அவரை வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்து மரத்தில் கட்டி வைத்து தாக்கியதாகவும் குறித்த பெண் தனது முறைபாட்டில் தெரிவித்துள்ளார்.
 
 மேலும் நான்கு பேரும் நாமலை தாக்கியுள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. நாமல் குமாரவினால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானதாக கூறப்படும் குறித்த பெண் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.  
 
இந்நிலையில் வாரியகொட பகுதிக்கு சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்யும் வீடொன்று தொடர்பில் தகவல் சேகரிப்பதற்காக தனது மனைவியுடன் சென்றபோது குறித்த பெண் உள்ளிட்ட குழுவினரால் தான் வரக்காபொலவில்  வைத்து  தாக்கப்பட்டதாக நாமல் குமார வரக்காபொல காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
 அதுமட்டுமன்றி பிரதேசத்திற்குப் பொறுப்பான பிரதிப் காவல்துறைமா அதிபர் மற்றும் வரக்காபொல காவல்துறை பொறுப்பதிகாரி ஆகியோர், அப்பகுதியில் இடம்பெறும் சட்டவிரோதச் செயற்பாடுகள் தொடர்பான தகவல்களைத் திரட்டுமாறு தன்னிடம் கோரியதாக நாமல் குமார மேலும்  தெரிவித்துள்ளார்.  
 
 எவ்வாறாயினும் நாமல் குமார ஒருபோதும் காவல்துறையினருக்கு எந்தவிதமான தகவலையும் வழங்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ள இதேவேளை, நாமல் குமார தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான பெண் உட்பட ஐவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று (02) வரக்காபொல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE THIS

Facebook Comment